திங்கள், 23 டிசம்பர், 2013

இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து


"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்''
நூல் : முஸ்லிம் (1573)

மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் விளங்க வேண்டியது, இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டு. ஒன்று குர்ஆன் மற்றொன்று சுன்னா எனப்படும் ஹதீஸ்கள். இந்த இரண்டை தவிர்த்து வேறு புதிய விஷயங்களை மார்க்கம் எனும் பெயரில் யார் சொன்னாலும் அது வழிகேடாகத்தான் இருக்கும். குர்ஆனைப் பற்றி நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் ஹதீஸ்கள் பற்றி நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

கடந்த காலங்களில் காரிஜிய்யாக்கள், முஃதஸிலாக்கள், ஷியாக்கள், காதியானி, பத்தொன்பது கூட்டம் போன்ற வழிகெட்ட கூட்டத்தினர், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தே தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக் கொண்டனர். ஆனால் அண்மைக் காலமாக குறிப்பாக தமிழுலகில் தவ்ஹீத் பேசும் சகோதரர்களிடத்திலும் இப்படியான ஹதீஸ்களை மறுக்கும் போக்கு தலைதூக்கியிருப்பது ஆபத்தான விஷயமாகும்.

குர்ஆனுக்கு முரண்பட்டால், அறிவுக்கு முரண்பட்டால், நடைமுறைக்கு ஒத்துவராவிட்டால் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களையும் மறுக்கலாம் என்ற கொள்கை நம் ஈமானுக்கே வேட்டு வைத்துவிடும். ஹதீஸ்களை நாம் முறையாக புரிந்து கொண்டால் நிச்சயம் குர்ஆனுக்கோ, அறிவுக்கோ, நடைமுறைக்கோ எவ்விதத்திலும் முரணாகாது. எனவே ஹதீஸ்கள் பற்றிய அடிப்படை விஷயங்களை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் நமது பள்ளியில் சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 8.12.13 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு இஷா வரை நடைபெற்ற இவ்வகுப்பில் மௌலவி ஹஸன் அலி உமரி அவர்கள், ஹதீஸ்கள் என்றால் என்ன? இஸ்லாத்தில் ஹதீஸ்களின் முக்கியத்துவம், ஹதீஸ்களின் பாதுகாப்பு தன்மை, ஆதாரப்பூர்வ ஹதீஸ்களின் வரயறைகள், ஹதீஸ்களை நாம் புரிந்து கொள்ள வேண்டிய முறைகள் போன்ற விஷயங்களை பவர்பாய்ண்ட் மூலம் தெளிவாக விளக்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்! வழக்கம்போல் இந்நிகழ்ச்சியிலும் சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து என்ற நூலை அடிப்படையாக வைத்தே இந்த வகுப்பு நடத்தப்பட்டது. அந்த நூலை pdf வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக