திங்கள், 17 நவம்பர், 2014

சூனியம் - உண்மை நிலை! நிகழ்ச்சி தொகுப்பு -1

சூனியம் - உண்மை நிலை!  என்ற தலைப்பில் கடந்த 9-11-14 ஞாயிறன்று நமது பள்ளியில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்த சுருக்கமான பார்வை:

சூனியம் என்ற விஷயம் இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் பேசும் மக்களிடையே பெரும் விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம், சூனியம் என்பது பொய், அது வெறும் வித்தை, அதன் மூலம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அவ்வாறு சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதோ, நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஸஹீஹான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதோ ஷிர்க் ஆகும். அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்பதாக சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் இந்த கவர்ச்சியான பேச்சுகளை சில பாமர மக்கள் உண்மையாக இருக்குமோ என குழம்பி வருகிறார்கள். குர்ஆனிலும் ஹதீஸிலும் தெளிவாக சூனியத்தை பற்றிய செய்திகள் இருக்க அவற்றை மறுப்பது குஃப்ர் நிலைக்கு தள்ளிவிடும் என்ற காரணத்தினால்தான் பயான்கள் செய்ய எத்தனையோ தலைப்புகள் இருந்தும் சூனியம் பற்றிய பயானுக்கு நமது பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக 7-11-14 ஜும்ஆ தினத்தன்று இதற்கான துண்டு பிரசுரங்கள் சுற்று பகுதிகளிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நமது தஃவா குழுவினர் மூலம் விநியோகிக்கப்பட்டது. துண்டு பிரசுரத்திலிருந்த 'சூனியம் உண்மை நிலை' என்ற தலைப்பை பார்த்ததும் TNTJ சகோதரர்கள் நிகழ்ச்சியில் கேள்வி கேட்க அனுமதி உண்டா என்று கேட்டார்கள். தாராளமாக உங்கள் கேள்விகளை கேட்கலாம் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. ஏற்கனவே மவ்லவி ஹஸன் அலி உமரி அவர்கள் சூனியம் தொடர்பாக கேள்விகள் கேட்க TNTJவினர் உட்பட அனைத்து சகோதரர்களுக்கும் அனுமதி கொடுக்கும்படி நம்மிடம் கூறியதையும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
TNTJ சகோதரர்கள் தங்கள் ஜமாஅத்தினருக்கு மட்டும் ஒரு மணி நேரம் கேள்வி-பதிலுக்கான நேரம் ஒதுக்கி தருமாறு நமது நிர்வாகத்தை அணுகினார்கள். பயான் மக்ரிபிலிருந்து இஷா வரைதான் என்பதாலும் மற்ற சகோதரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்பதாலும் இதை நமது நிர்வாகம் அனுமதிக்கவில்லை. எனினும் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் TNTJவினர் மற்றவர்களுக்கு வாய்ப்பு தராமல் தாங்களே ஆக்கிரமித்துக் கொண்டு கேள்விகளை கேட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

9-11-2014 அன்று மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் மவ்லவி ஹஸன் அலி உமரி தன் உரையை ஆரம்பித்தார். உரையின் தொடக்கமாக சூனியம் தொடர்பான தலைப்பை தான் தேர்வு செய்ததன் அவசியத்தையும் தமிழ் பேசும் மக்களிடையே சூனிய விவகாரம் ஏற்படுத்தி வரும் விபரீதத்தையும் தெளிவுபடுத்தினார். மேலும் இஸ்லாத்தின் மூலாதரங்களான குர்ஆன் ஹதீஸ் இரண்டுமே வஹிதான். எனவே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவை ஒரு போதும் குர்ஆனுக்கு முரண்படாது, நம்முடைய பகுத்தறிவை கொண்டு அவற்றை மறுக்க கூடாது என்ற அடிப்படை விஷயத்தை முதலில் பதிவு செய்தார்.

தொடர்ச்சியாக அவர் பேசுகையில்,
சூனியம் என்றால் என்ன?

சூனியத்தின் வெவ்வேறு வகைகள்

சூனியத்தின் மூலம் என்னென்ன (அல்லாஹ் நாடினால்) தாக்கங்கள் ஏற்படுத்த முடியும்?

புற சாதனங்களின்றி சூனியத்தில் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது?

ஜின்கள், ஷைத்தான்களுக்கும் சூனியக்காரனுக்குமுள்ள தொடர்பு

சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் கொடுக்கப்படுகிறதா?

சூனியம் தொடர்பான குர்ஆன் 2:102 வசனத்தின் விளக்கம்

அந்த வசனத்திற்கு சூனியத்தை மறுப்பவர்கள் கொடுக்கும் தவறான விளக்கம்

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் என்ன பாதிப்பு ஏற்பட்டது?

அந்த ஹதீஸ்களை நம்புவது ஷிர்க் ஆகுமா?

போன்ற பல்வேறு விஷயங்களை பற்றியும் குர்ஆன் ஹதீஸ் ஆதரத்துடன் அழகான முறையில் அழுத்தம் திருத்தமாக  அனைவருக்கும் புரியும் விதமாக பதிவு செய்தார். குறிப்பாக அவர் தன்னுடைய உரையில் எந்த தனிநபரையும் இயக்கத்தையும் சாடாமல் எதிர்கருத்துகளை மட்டுமே விமர்சித்து விளக்கமளித்தது அனைவரையும் ஈர்த்தது. சூனியம் தொடர்பாக மாற்றுக்கருத்தில் இருப்போர் வைக்கும் பல்வேறு வாதங்களுக்கும் தன்னுடைய உரையிலேயே பதில் சொல்லி விட்டதால் கேள்வி கேட்க பட்டியல் போட்டு பேப்பரில் எழுதி எடுத்து வந்த சில சகோதரர்கள் அவை ஒவ்வொன்றாக டிக் செய்து கொண்டிருந்ததை நாம் பார்க்க முடிந்தது.

அடுத்ததாக கேள்வி பதில் ஆரம்பமானது. கேள்வி கேட்க விரும்பும் சகோதரர்கள் பள்ளிவாசலின் கண்ணியத்தை பேணி மார்க்க வரைமுறைக்கு உட்பட்டு கேள்விகளை சுருக்கமாக கேட்குமாறும் ஒரே நபர் பல கேள்விககள் கேட்காமல் எல்லோருக்கும் வாய்ப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் கேள்வி கேட்ட முதல் சகோதரரே இதுபோன்ற கட்டுப்பாடெல்லாம் எங்களுக்கு நீங்கள் போடக்கூடாது என்று சொல்லி நாங்கள் விதிகளை மீறித்தான் கேட்போம் என்கிற ரீதியில்தான் பேசியது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மேலும் அவர் அஹமத் நூலிலுள்ள சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸை குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தை கேட்டார்.
அந்த ஹதீஸ் குறித்து ஏற்கனவே மவ்லவி ஹஸன் அலி அவர்கள் தன் உரையில் விளக்கமளித்துவிட்ட போதும் மீண்டும் விளக்கமளித்தார். குறிப்பிட்ட அந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை அறிஞர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டி விளக்கினார். ஒரு வாதத்திற்கு அந்த ஹதீஸ் ஆதரப்பூர்வமானது என்றாலும் அந்த ஹதீஸை அறிவித்த அதே அஹ்மத் இமாம் அவர்கள், நபி(ஸல்) அவகளுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸையும் அறிவிக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல பொருள் கொண்டால் அஹ்மத் இமாம் அவர்களும் சொர்க்கம் செல்ல மாட்டார் (நஊது பில்லாஹ்) என்றாகி விடும். எனவே இந்த ஹதீஸில் சொல்லப்பட்டவர்கள் சூனியக்காரனுக்கு எல்லா ஆற்றலும் இருக்கிறது. அவன் நாடியதெல்லாம் செய்கிறான் என்று நம்புவோரைத்தானே தவிர அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் சூனியத்திற்கு தாக்கம் உண்டாகிறது என்று நம்புவோரை குறிக்காது என்பதை தெளிவுபடுத்தினார்.

கேள்வி கேட்டவர் விடாப்பிடியாக அதே ஹதீஸை சஹீஹ் என்று சொல்லி பட்டியல் போட்டு நேரத்தை விரயமாக்கி விளக்கி கொண்டிருக்க ஹஸன் அலி உமரி குறுக்கிட்டு "நீங்கள் பயான் செய்ய வேண்டாம், கேள்வியை மட்டும் கேளுங்கள் என்றார்". அதே கேள்வியை மறுபடி கேட்க மவ்லவி மீண்டும் விளக்கினார்.
"நபி(ஸல்) அவர்கள், தங்களுக்கு  சூனியம் செய்யப்பட்டதாக ஆயிஷா(ரலி) அவர்களிடம் அறிவிக்கிறார்கள். அவர்களிடமிருந்து நம்பகமான அறிவிப்பாளர்கள் மூலம் ஹதீஸ்களை தொகுத்த அறிஞர்கள் தங்கள் நூலில் பதிவு செய்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் சத்தியத்தில் ஒரு கூட்டம் நிலைத்திருப்பார்கள் என்று கூறியது போல அந்த ஹதீஸ்களை வாழையடி வாழையாக முஸ்லிம்கள் நம்பி வருகிறார்கள். நீங்கள் குறிப்பிடும் 'சூனியத்தை நம்பியவர்கள் சொர்க்கம் செல்லமாட்டார்கள்' என்ற ஹதீஸ் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை நம்புவோரைக் குறிக்குமென்றால், வரலாற்றில் முஃதஸிலாக்களும் சில வழிகேடர்களும்தான் அதை மறுத்துள்ளார்கள். அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். மற்ற அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள் என்றாகிவிடும். சூனியக்காரனுக்கு எல்லா ஆற்றலும் உண்டு. அவன் நினைத்ததையெல்லாம் செய்வான் என்று நம்புவோரத்தான் அந்த ஹதீஸ் குறிக்கிறது" என்று விளக்கி கூறினார். கேள்வி கேட்ட சகோதரர் வேறெதுவும் கேள்வியில்லை என்று எழுந்த வேகத்தில் அமர்ந்து கொண்டார்.

மேற்கண்ட கேள்வியையும் பதிலையும் கேட்ட பார்வையாளர் பலருக்கும் ஒரு கேள்வி எழுந்தது என்னவெனில் 'சூனியம் குறித்த சஹீஹான தெளிவான ஹதீஸ்கள் பல இருக்க இவர்கள் ஏன் பலவீனமான ஹதீஸை பற்றி பிடித்து கொண்டிருக்கிறார்கள்?' என்பதுதான் அது.

அடுத்த கேள்விகள் என்ன? நிகழ்ச்சியின் இறுதியில் என்ன நடந்தது? இந்த பயான் குறித்த மக்களின் கருத்து என்ன? போன்றவற்றை இன்ஷா அல்லாஹ்.. அடுத்த பகுதியில் பார்ப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக