அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 1-2-2015 ஞாயிறு அன்று முஸ்லிமல்லாதோருக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. நமது தஃவா குழுவினரின் கடும் உழைப்பினால் இம்முறை திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
சகோதரர் சுதின் அவர்களின் இனிமையான கிராஅத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு மவ்லவி கெளஸ்கான் உமரி அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளான ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்க்கை ஆகிய விஷயங்களை அழகிய முறையில் விவரித்தார். தொடர்ந்து பேசிய சகோதரர் முஹம்மது அமீருத்தீன் அவர்கள் இஸ்லாமும் பிற மதங்களும் என்ற தலைப்பில் இந்து கிறிஸ்தவ மத நூல்களில் காணப்படும் ஏகத்துவ வாசகங்களை ஆதாரத்தோடு விளக்கினார்.
பிறகு சகோதரர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டார்கள். குறிப்பாக கிறிஸ்தவம், பைபிள் குறித்த கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டன. அவர்களுக்கு மவ்லவி கெளஸ்கான் உமரி மற்றும் சகோ. அமீருத்தீன் அவர்கள் இருவரும் தெளிவான முறையில் பதிலளித்தார்கள். லுஹர் தொழுகை நேரம் நெருங்கியதும் விருப்பமுள்ள சகோதரர்கள் நம்மோடு தொழுது கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் பல சகோதரர்கள் நம்முடன் தொழுகையில் கலந்து கொண்டார்கள். சிலர் நாம் தொழுவதை ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்தார்கள்.
பிறகு சகோதரர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகும் பலர் தங்கள் சந்தேகங்களை கேட்டு கொண்டிருந்தார்கள். இதற்கிடையே சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக கூறியதையடுத்து அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டு அவர் விருப்பத்திற்க்கிணங்க முஹம்மது அலி என்ற பெயர் வைக்கப்பட்டது. கலிமா சொன்ன சகோதரருக்கு மேற்கொண்டு இஸ்லாத்தின் கடமைகள் குறித்தும் பேண வேண்டிய ஒழுக்கங்களை பற்றியும் மவ்லவி அக்பர் அலி உமரி தனியாக விளக்கினார்.
தேவைப்பட்ட சகோதரர்களுக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களும் சத்தியத்தை சரியாக புரிந்து கொள்ளவும் நேர்வழி பெறவும் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக