அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் அருள் வளங்களை வாரி இறைக்கும் மாதமாகிய ரமளான் இனிதே நம்மை விட்டு கடந்து சென்று விட்டது. வழக்கம்போல இந்த ரமளானிலும் நமது பள்ளியில் அனைத்து ஏற்பாடுகளும் பணிகளும் சிறப்பாக நடை பெற்றன.
இரவு தொழுகை நடத்த கர்நாடக மாநிலத்தை சார்ந்த ஹாபிஸ் முபீன் உமரி அவர்கள் நியமிக்கப்பட்டார். அவருடைய இனிமையான கிராஅத்துடன் 27 நாட்களும் சிறப்பாக இரவுத்தொழுகை நடைபெற்று முழு குர்ஆனையும் நிறுத்தி நிதானமாக நின்று கேட்க முடிந்தது.
இரவு தொழுகையை தொடர்ந்து "நபிமார்களின் வரலாறு" என்ற தலைப்பில் நமது பள்ளியின் இமாம் மவ்லவி கெளஸ்கான் உமரி அவர்களின் சிறப்புரையுடன் தொடர் பயான் நிகழ்ச்சி பயனுள்ளதாகவும் வரலாற்று நிகழ்வுகளை கண்முன் நிறுத்துவதாகவும் அமைந்தது.
நோன்பு கஞ்சி செலவின தொகை 5000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு சிறப்பான முறையில் இஃப்தார் ஏற்பாடு நடைபெற்றது. நோன்பு கஞ்சியில் ஆரம்ப நாட்களில் சில குறைகள் இருந்தாலும் பின்னர் அதற்கான காரணங்கள் அறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு பின்னர் சுவை மிக்க கஞ்சியாக பரிணமித்தது.
ஸஹர் ஏற்பாடு கடைசி பத்து நாட்களும் சிறப்பாக இருந்தது. கடந்த வருடங்களை காட்டிலும் இவ்வருடம் மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குறிப்பாக வட இந்திய உழைக்கும் வர்க்கத்தினருக்கு வரப்பிரசாதமாக சஹர் ஏற்பாடு அமைந்தது என்றால் மிகையாகாது. இன்ஷா அல்லாஹ் வருங்காலங்களில் 30 நாட்களும் ஸஹர் ஏற்பாடு செய்யும் சூழலை அல்லாஹ் உருவாக்கி தருவானாக!
லைலத்துல் கத்ர்இரவாக நபி (ஸல்) அவர்கள் கூறிய கடைசி ஐந்து ஒற்றைப்படை இரவுகளிலும் சிறப்பு பயான்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்,
மவ்லவி அப்துல்லாஹ் தவ்ஹீதி,
மவ்லவி தர்வேஸ் ஹஸனி, மவ்லவி அலீம் அல்புகாரி மற்றும் நமது இமாம் கெளஸ்கான் உமரி ஆகியோர் மக்களுக்கு அவசியமான நல்லுபதேசங்களை தங்களின் சிறப்பான பேச்சாற்றல் மூலம் வழங்கினார்கள். இந்நாட்களில் நமது மஹல்லாவாசிகள் மட்டுமல்லாமல் கோரிமேடு, பூந்தமல்லி, மாங்காடு போன்ற சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும் மக்கள் பயான் கேட்கவும் அமல்கள் செய்யவும் வந்த வண்ணம் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபித்ரா தொகை ஒரு நபருக்கு 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்ட தொகையில் ஏழை குடும்பங்களுக்கு பெருநாளுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இம்முறை ஃபித்ரா பெற தகுதியுடையோரை கண்டறிவதற்காக நமது தஃவா குழு மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் குழு உருவக்கப்பட்டது. அவர்கள் அளித்த பட்டியலுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டது. எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் நமது பள்ளியின் தொழுகையாளிகளும் சந்தாதாரர்களுமான ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இவற்றில் ஒருசில சிக்கல்கள் இருந்தது எனினும் இன்ஷா அல்லாஹ் வருங்காலங்களில் அவை சீர் செய்யப்படும்.
ஜகாத் பொருட்களும் அவற்றிற்கு தகுதியுடையோருக்கு விநியோகிக்கப்பட்டது.
பெருநாள் தொழுகை வழக்கம்போல் AHM பள்ளி திடலில் நடைபெற இருந்து மழை காரணமாக நமது பள்ளியிலேயே நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளில் நமது தஃவா குழுவினர் முதல் நாள் இரவிலும் ஃபஜ்ருக்கு பிறகும் பம்பரமாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ்வின் பெரும் கிருபையால் நம் எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி பெருநாள் தொழுகைக்கு மக்கள் அதிகமான அளவில் திரண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
பெருநாள் தொழுகை முடிந்ததும் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு இறுதியில் நம் பள்ளியின் முன் பக்கம் போடப்பட்ட மேற்கூரை அடிக்கடி மழை பெய்த இந்த ரமளானில் பெரும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இமாம் அவர்களின் மார்க்க வழிகாட்டுதல்,
பள்ளி நிர்வாகத்தினரின் சீரிய செயல்திறன்,
தஃவா குழுவினரின் அயராத உழைப்பு,
நன்மைகளை அள்ளிக்கொள்ள தங்கள் பொருளாதாரத்தை வாரி வழங்கிய விசாலமான உள்ளங்கள் மற்றும்
தங்கள் இபாதத்துகளாலும் துஆக்களாலும் அல்லாஹ்விடம் மன்றாடிய ஜமாஅத்தார்கள் ஆகிய இவர்கள் அனைவருடைய ஒத்துழைப்புதான் இந்த பணிகள் அனைத்தும் செம்மையாக நடைபெற உறுதுணையாக இருந்தது.
இந்த பணிகளில் ஏதும் குறைகள் இருந்தால் அதற்குரியவர்களிடம் நேரடியாக சொல்லி சரி செய்வோம். நிறைகள் இருந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி பணிகள் தொடர்ந்து நடைபெற துஆ செய்வோம்.
இதற்காக தங்கள் உடலாலும் பொருளாலும் பங்கெடுத்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நிறைவான நற்கூலியை வழங்குவானாக! ஆமீன்!




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக