நமது பள்ளியில் தஃவா குழு உருவாக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் தஃவா குழுவின் மிக முக்கியமான பணியாகிய முஸ்லிமல்லாதோர்க்கு இஸ்லாத்தை எடுத்து செல்லும் விஷயத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி இல்லாதது பெரும் குறையாகவே இருந்தது.
எனவே முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை கொண்டு செல்வதை முடுக்கி விடும் நோக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன் தஃவா குழுவில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு சிறு சிறு குழுக்களாக வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல். ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்மொழியாகவும் சுருக்கமாக விளக்கம் கொடுத்தல்.
2. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமை முஸ்லிமல்லாதோருக்காக நமது பள்ளியில் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' எனும் நிகழ்ச்சி நடத்துதல். இந்நிகழ்ச்சி மூலம் இஸ்லாத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு அவர்கள் கேட்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தல்.
மேற்கண்ட இந்த முடிவுகளின்படி மாஷா அல்லாஹ் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் அஸருக்கு பிறகு நமது தஃவா குழுவினர் ஆர்வத்தோடும் வீரியத்தோடும் செயல்பட்டு வருகிறார்கள்.
கடைசி ஞாயிறான 26.1.14 அன்று இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 37 முஸ்லிமல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டனர். சகோதரர் அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன? ஏனைய மதங்களிலிருந்து இஸ்லாத்தின் கடவுள் கொள்கை எப்படி மாறுபட்டிருக்கிறது? இறப்புக்கு பின்னுள்ள மறுமை வாழ்க்கை போன்ற அடிப்படை விஷயங்களை விளக்கினார். மேலும் சகோதரர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.
லுஹர் தொழுகைக்காக நாம் தயாரான போது சில சகோதரர்கள் நம்மோடு சேர்ந்து தொழுவதற்கு ஆசைப்பட்டார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நம்மோடு தொழுதார்கள். மற்றவர்கள் நாம் தொழுவதையும் பள்ளிவாசலையும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தனர். நிச்சயம் அவர்களுக்கு அது மாறுபட்ட அனுபவமாக இருந்திருக்கும்.
தொழுகை முடிந்ததும் அவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. பிறகு அவர்களுக்கு புத்தகங்களும் துண்டு பிரசுரங்களும் வழங்கி இன்முகத்தோடு நம் த்ஃவா குழுவினர் வழியனுப்பி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சி நமது பள்ளிக்கும் தஃவா குழுவினருக்கும் ஒரு புதிய அனுபவமாக இருந்தாலும் அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால் சிறப்பாக முடிந்தது. வந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டி ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக ஆக்கி வைப்பானாக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக